தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை நீலகிரி மாவட்டத்திற்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக
இன்று கிருஷ்ணகிரியில் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரியில் மிக கனமழை நீடிக்கும். மேலும் கோயம்புத்தூர் மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.