அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்ற காரணத்தால், மக்கள் பல்வேறு வகைகளில் சொல்லொண்ணா வேதனையை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன் விபரம் வருமாறு:-திமுக-வைச் சேர்ந்தவர் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவராக இருந்து வருகின்ற நிலையில், இவரது மக்கள் விரோதச் செயல்பாடுகளால், கழகத்தைச் சேர்ந்தவர்கள் நகர மன்ற உறுப்பினராக இருக்கும் வார்டுகள் உட்பட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதில்லை. நகர மன்றம் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது.
இங்கு திமுக-வினரின் ஊழல் மற்றும் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது.பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.குடிநீர் சீராக விநியோகிக்கப்படுவதில்லை; தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆதாய நோக்கத்துடன் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.
இங்கு புதிய வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான வரைபட அனுமதி பெறுவதிலும், வரி விதிப்பதிலும் அதிக அளவில் முறைகேடுகள் நிகழ்வதாகத் தெரிகிறது.மக்களின் தேவைகள் முறையாக நிறைவேற்றப்படாத நிலையில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி முதலானவை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளன.இங்குள்ள பேருந்து நிலையங்கள், காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் மாட்டுச் சந்தைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டும், காணாமலும் இருந்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக பொள்ளாச்சி நகரத்தின் சார்பில், 13.8.2025 (புதன் கிழமை) காலை 10 மணியளவில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் தலைமையிலும் நடைபெறும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.