தி.மு.க.வின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையின்போது, வாக்காளர்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், ஓடிபி பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையின்போது, வாக்காளர்களின் ஆதார் விவரங்களை சட்டவிரோதமாக சேகரிக்கிறது. அவர்களின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பெற்று, இந்தச்செயலைச் செய்கிறது" என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் வாக்காளர்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு இடைக்கால தடை விதித்தனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "கட்சி ஆதார் விவரங்களை சேகரிக்கவில்லை" என்று வாதிட்டார். இருப்பினும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்தது.