மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் இன்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திர வீட்டில் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்படுகிறது.
எழுச்சிப் பயணத்திற்காக நேற்று திருநெல்வேலி மாவட்டம் சென்ற எடப்பாடியார் ராதாபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்துக் கொள்கிறார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து எடப்பாடியாருடன், கடம்பூர் ராஜூ, ஆர் பி உதயக்குமார், விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்கின்றனர்.
பாஜக தரப்பில் முன்னாள் தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன், எல் முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். ஆனால் அனைத்து பாஜக தமிழக முன்னாள் தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த விருந்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துக்கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை.
இந்த விருந்தில் 109 வகையான உணவு மெனுக்கள் பரிமாறப்பட உள்ளது. அதன்படி 4 வகை சூப், சாலட், பனியாரம், போண்டா உள்ளிட்ட 9 வகை தொடக்க உணவுகள், சிக்கன் பார்பிக்யூ, பானிபூரி உள்ளிட்ட சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, பலாப்பழ மைசூர் பாக், போளி, மோமோஸ், 4 வகை ரொட்டிகள், அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 6 வகை பஃபே உணவுகள், பலவிதமான தோசை வகையறாக்காள், ஐஸ்க்ரீம், பழ ஜூஸ் என 109 வகையான உணவுகள் தயாராகி வருகிறது.
Edit by Prasanth.K