பெங்களூருவில் உள்ள ஒரு திரைப்பட வீடியோ சேமிப்பு அலுவலகத்தில், விளக்கை அணைப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறு வாக்குவாதம், மேலாளர் பீமேஷ் பாபு கொலையில் முடிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அதிக வெளிச்சம் ஒவ்வாமை காரணமாக, பீமேஷ் பாபு அடிக்கடி விளக்குகளை அணைக்குமாறு சக ஊழியர்களை கேட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று, விஜயவாடாவை சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகியான சோமலா வம்சி என்பவரிடம் மீண்டும் விளக்கை அணைக்க கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வம்சி, முதலில் பாபு மீது மிளகாய் பொடி தூவி, பின்னர் அருகில் இருந்த ஆயுதத்தை எடுத்து அவர் மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், வம்சி கோவிந்தராஜநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விளக்கு தகராறே கொலைக்கு காரணம் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.