பெங்களூருவில் உள்ள ஓச்கூர் சாலை அருகே நிகழ்ந்த சோகமான விபத்தில், பிரியங்கா குமாரி பூனியா என்ற 26 வயது பெண் வங்கி ஊழியர் லாரி மோதி உயிரிழந்தார். இவர் தனது சகோதரர் நரேஷ் குமார் பூனியாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
நரேஷ் ஓட்டி சென்ற வாகனத்துக்கு முன்னால் சென்ற கார், சாலையில் இருந்த பெரிய குழி ஒன்றின் காரணமாக திடீரென வேகம் குறைத்தது. இதனால் நரேஷ் அவசரமாக பிரேக் போட்டபோது, இருசக்கர வாகனத்தின் கைப்பிடி எதிரே வந்த லாரி மீது மோதியது.
மோதலில் நரேஷ் ஒருபுறமும் பிரியங்கா மறுபுறமும் சாலையில் விழுந்தனர். அப்போது, லாரி பிரியங்காவின் தலையின் மீது ஏறி சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரேஷுக்கு காயங்கள் ஏற்பட்டன.
விபத்து நடந்த சாலை ஏழு மாதங்களுக்கும் மேலாக மோசமான நிலையில் இருந்ததாக நரேஷ் தெரிவித்துள்ளார். இந்த சோகச் சம்பவம், பெங்களூருவின் மோசமான சாலை நிலையை பற்றி மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.