ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், வரவிருக்கும் பிஹார் சட்டமன்ற தேர்தல்களுக்கான 'மகாகத்பந்தன்' சார்பில் முதல்வர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வி.ஐ.பி. கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் பாட்னாவில் அறிவித்தார்.
கூட்டணிக்குள் நிலவியதாக கூறப்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரஸ் தலைமையால் அசோக் கெலாட் அனுப்பப்பட்ட நிலையில், அவர் கூட்டணி "முழு ஒற்றுமையுடன்" இருப்பதாக உறுதி அளித்தார். சிபிஐ தலைவரும் தேஜஸ்வியை "சர்ச்சைக்கு இடமில்லாத முதல்வர் முகம்" என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் என்.டி.ஏ. கூட்டணிக்கு பிஹார் வளர்ச்சிக்கான தெளிவான திட்டம் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். "பாஜக, நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வராக்காது" என்று கூறிய அவர், தங்கள் கூட்டணியின் நோக்கம் பிஹாரை கட்டமைப்பதே என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியின் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்படுவாரா? அல்லது வேறொருவர் முன்னிலைப்படுத்தப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.