பீகார் சட்டமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாததால், பல தொகுதிகளில் குழப்பமும், போட்டிகளும் உருவாகியுள்ளன.
உதாரணமாக, தர்பங்கா கவுரா பவுராம் தொகுதியில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. முதலில், ஆர்.ஜே.டி. கட்சி அவசரமாக அப்சல் அலிகானை வேட்பாளராக அறிவித்தது. ஆனால், பின்னர் இந்த தொகுதி கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், கட்சி சின்னத்தின் ஆவணங்களை திருப்பி தர அப்சல் அலிகான் மறுத்துவிட்டார். முறையான ஆவணங்களுடன் அவர் ஆர்.ஜே.டி. வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துவிட்டார். அப்சலை ஆர்.ஜே.டி. தலைமை ஆதரிக்காதபோதும், தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுவை நிராகரிக்கவில்லை.
இந்த சூழ்நிலையால், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிடும் அப்சல் அலிகானுக்கு எதிராக, கூட்டணி வேட்பாளரான சந்தோஷ் சாகினியை ஆதரித்து, பிரச்சாரம் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.