வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக தலைநகர் டாக்காவில் வெடித்த வன்முறை போராட்டங்களில் இருவர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. பல மாதங்களாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பு வெளியானது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் டாக்காவில் நெடுஞ்சாலைகளை மறித்து பேரணி நடத்தினர். இதனால், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கலைக்கக் காவல்துறையினர் தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தினர். கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.
இந்த கலவரத்தின்போது, பொது சொத்துகளைச் சேதப்படுத்த முயன்ற போராட்டக்காரர்களால் கடும் பதற்றம் நிலவியது. இதில் பலர் காயமடைந்த நிலையில், அதிகாரிகள் இருவர் பலியானதை உறுதிப்படுத்தியுள்ளனர்.