ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வர இருக்கிறார். இந்த வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று மாஸ்கோவில் உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்குவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, புதின் வருகை குறித்து அஜித் தோவல் பேசினார். வரவிருக்கும் புதினின் இந்திய பயணம் குறித்து இந்தியா மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தோவல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் இரண்டு முறை சந்தித்துக்கொண்டனர். ஜூலை மாதம் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் இருதரப்பு பயணமாக மாஸ்கோவுக்கு சென்றபோது ஒரு சந்திப்பு நடந்தது. அப்போது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தியதற்காக மோடிக்கு ரஷ்யாவின் உயரிய சிவில் விருதான 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலன்' வழங்கப்பட்டது. அதன்பின் அக்டோபர் மாதம் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.
இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவிருப்பதும், ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவிருப்பதையும் பார்க்கும்போது இந்தியா, சீனா, ரஷ்யா இணைந்து டிரம்பின் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என தெரிகிறது.