கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 60 வயது விமானி ஒருவர், 26 வயது விமான பணிப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட விமானி ரோஹித் சரண், அவரது சக விமானி மற்றும் பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் ஆகியோர், ஆந்திரப் பிரதேசத்தின் புத்தபர்த்தி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் நவம்பர் 19 அன்று புத்தபர்த்திக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சிறிது ஓய்வுக்காக விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது ரோஹித் சரண், முதலில் புகைப் பிடிப்பதற்காக வெளியே செல்லலாம் என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது அறைக்கு அருகில் அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர், அவர் வலுக்கட்டாயமாக பணிப்பெண்ணை அறைக்குள் இழுத்து சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
நவம்பர் 20 அன்று பேகம்பேட்டிற்கு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக விமான போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாகத்தை அணுகி, பேகம்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.