அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, நிகோலஸ் ரோஸ்ஸி என்ற நபர் தனது மரணத்தை போலியாக அறிவித்து, ஸ்காட்லாந்துக்கு தப்பியோடினார்.
தான் கேன்சரால் இறந்ததாக போலியான இரங்கல் செய்தியை வெளியிட்டு, நிகோலஸ் அலாஹ்வெர்டியன் என்ற தனது சட்டபூர்வமான பெயரை கைவிட்டு, ஐரோப்பாவில் பதுங்கினார். 2021இல் கோவிட்-19 சிகிச்சைக்காக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சேர்ந்தபோது, தனது உடலில் இருந்த பச்சை குத்தல்கள் மூலம் இன்டர்போல் தேடிய ரோஸ்ஸி என அடையாளம் காணப்பட்டார். தான் ஆர்தர் நைட் என்ற ஐரிஷ் அனாதை என்று நாடகமாடியும், வீல்சேர் மற்றும் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் நீதிமன்றத்துக்கு வந்தும் அவர் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்.
நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பிறகு, 2024இல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட ரோஸ்ஸி, திங்களன்று ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை சிறைத் தண்டனை பெற்றார். ரோஸ்ஸி மற்றொரு பாலியல் வன்புணர்வு வழக்கிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு நவம்பர் மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது.