சென்னை தாம்பரம் அருகே இன்று மதியம் 2.25 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பிசி-7 எம்கே II (PC-7 Mk II) ரக பயிற்சி விமானம் வழக்கமான பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை உணர்ந்த விமானிகள், உடனடியாக பாராசூட் உதவியுடன் பத்திரமாக வெளியே குதித்து உயிர் தப்பினர். விமானம் சேறு நிறைந்த பகுதியில் விழுந்ததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப் படை தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக ஊடக பக்கத்தில், நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று புதுக்கோட்டையில் சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், இன்று தாம்பரம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.