துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் இலகு ரகப் போர் விமானம் சாகச பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி படுகாயமடைந்து உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
விமானம் கீழே விழுந்ததும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் மீது அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்படி, விமானி 'நெகட்டிவ் ஜி-ஃபோர்ஸ்' திருப்பத்தில் இருந்து விமானத்தை மீட்டெடுக்க தவறியிருக்கலாம் என்று தெரிகிறது.
HAL-ஆல் உருவாக்கப்பட்ட இந்த 4.5வது தலைமுறை விமானம் விபத்துக்குள்ளாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். மார்ச் 2024 இல் நடந்த முந்தைய விபத்தில் விமானி பாதுகாப்பாக வெளியேறினார். விமான படையை பலப்படுத்தும் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் தேஜஸ் விமானமும் ஒன்றாகும்.