அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் நாளை பிரதமர் மோடி, ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக புறப்படுவது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நட்பு நாடான இந்தியாவை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் இந்தியாவில் ஜவுளித்துறை உள்ளிட்ட பல துறைசார் நிறுவனங்கள் பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. ஆனாலும் அமெரிக்காவின் வரிகளுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து வர்த்தகத்தை வேறு வகையில் நீட்டிப்பதற்கான சாத்தியங்களையும் முயன்று வருகிறது.
இந்த நிலையில்தான் நாளை பிரதமர் மோடி ஜப்பான் செல்வது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 15வது இந்தியா - ஜப்பான் ஆண்டு கூட்டத்திற்காக பிரதமர் மோடி ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் ஜப்பான் செல்கிறார். அங்கு இந்தியா - ஜப்பான் இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல், கல்வி தொடர்பான பகிர்வுகள் உள்ளிட்ட பல புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகளும், ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்திய இறக்குமதிகளுக்கான அமெரிக்க சந்தையை ட்ரம்பின் வரிவிதிப்பு கடுமையாக்கி உள்ள நிலையில், ஜப்பானில் இந்திய தொழில்துறைக்கான வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி ஜப்பான் தரப்பிடம் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பதவியேற்ற பின் ஒருமுறை ஜப்பான் சென்றார். அதற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது ஜப்பானுக்கு செல்கிறார். சமீப ஆண்டுகளில் இந்தியா - ஜப்பான் இடையேயான தொழில்ரீதியான, ராஜாங்க ரீதியான உறவுகள் வலுப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஜப்பானுடன் 170 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் உலக பொருளாதார மதிப்பில் நான்காம் இடத்தில் இருந்த ஜப்பானை இந்தியா முந்தியது என்றாலும், இரு நாடுகள் இடையேயான உறவுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K