தலைநகர் டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் இருந்து 350 கிலோ அம்மோனியம் நைட்ரேட், ஒரு ஏ.கே.-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை ஒரு டாக்டர் வீட்டில் இருந்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காஷ்மீர் டாக்டர் ஆதில் அகமது ரத்தரை உ.பி. சஹாரன்பூரில் கைது செய்த பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த மாபெரும் ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்தர் அளித்த தகவலின்படி, இந்த வெடிபொருட்கள் மற்றொரு மருத்துவரான முஜாஹில் ஷகீல் என்பவருடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர் தற்போது காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் தலைநகருக்கு அருகில் பதுக்கி வைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும், உயர் கல்வி கற்ற மருத்துவர்கள் பயங்கரவாத வலையமைப்பால் ஈர்க்கப்பட்டிருப்பது, புதிய பயங்கரவாத ஆட்சேர்ப்பு முறையைக் காட்டுவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.