டெல்லியை சேர்ந்த காப்பீட்டு முகவர் சந்தர், அண்டை மாநிலமான ஃபரிதாபாத்தில் உள்ள வடிகாலில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இக்கொலையில், சந்தரின் முன்னாள் காதலியான லட்சுமி மற்றும் அவரது வருங்கால கணவர் கேசவ் ஆகியோரை ஃபரிதாபாத் காவல்துறை கைது செய்துள்ளது.
லட்சுமிக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், சந்தர் அவரது திருமணத்தை நிறுத்தும்படி மிரட்டி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சந்தரின் மிரட்டல்களால் சோர்வடைந்த இந்த ஜோடி, அவரை கொலை செய்யத் திட்டமிட்டது.
அக்டோபர் 25 அன்று, சந்தரை லட்சுமி வரவழைத்து, ஃபரிதாபாத்தில் உள்ள ஆத்மத்பூர் என்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அங்கு, கேசவும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து சந்தரின் கழுத்தை கயிற்றால் நெரித்துக் கொன்று, சடலத்தை வடிகாலில் வீசியுள்ளனர். விசாரணையில் லட்சுமியும் கேசவும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தலைமறைவான மற்ற இரண்டு கூட்டாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.