உத்தரகாண்ட் சலூன் உரிமையாளரை, அவரது பெண் ஊழியரின் கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்தாக்குதல், இருவருக்கும் இடையே இருந்த சந்தேகத்திற்குரிய உறவு காரணமாக நிகழ்ந்துள்ளது.
சுரேஷ் குமார் என்ற மதுபான வியாபாரி ஒரு சலூனையும் நடத்தி வருகிறார். அந்த சலூனில் மேலாளராக பணிபுரியும் மேகா என்பவருக்கு வினோத் கௌசிக் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. மேகாவுக்கும் வினோத்துக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஆனால், சில மாதங்களாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், மேகா தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, சுரேஷ், மேகாவை காரில் அழைத்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மேகாவின் கணவர் வினோத் தனது கூட்டாளியுடன் ஒரு பைக்கில் சென்று சுரேஷை துப்பாக்கியால் சுட்டார்.
சுரேஷ் கழுத்து, வயிறு மற்றும் விலா எலும்புகளில் என மூன்று இடங்களில் குண்டு காயமடைந்தார். இந்த தாக்குதலைக் கண்ட மேகா அலறியதால், வினோத் மற்றும் அவரது கூட்டாளி சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர், வினோத் மற்றும் அவரது கூட்டாளி மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.