முதல் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையில், ஒரு முஸ்லிம் ஆண் தனது இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், முதல் மனைவிக்கு அது குறித்து கருத்துத்தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முகமது ஷெரீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் இந்த கருத்தை முன்வைத்தனர். முஸ்லிம் தனிநபர் சட்டம் இரண்டாவது திருமணத்தை அனுமதித்தாலும், கணவனின் இரண்டாவது திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம் என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
"முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், முதல் மனைவிக்கு கருத்துத் தெரிவிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்."
முதல் மனைவி ஆட்சேபணை தெரிவித்து, இரண்டாம் திருமணம் செல்லாது என்று குற்றம் சாட்டினால், திருமண பதிவாளர் பதிவை தவிர்த்துவிட்டு, அதன் செல்லுபடியை நிலைநாட்ட வழக்கை சிவில் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த வழக்கில் முதல் மனைவி சேர்க்கப்படாததால், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.