கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்கு பிறகு பேசிய சித்தராமையா, பா.ஜ.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால், அதை 'ஆக்ரோஷமாக' எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கொண்டுவரும் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள காங்கிரஸ் முழுமையாக தயாராக இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டி.கே. சிவக்குமார் பேசுகையில், "அரசியல், கட்சி மற்றும் அரசு குறித்து விவாதித்தோம். எதிர்ப்புகளை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று உறுதி அளித்தார்.
மேலும், "டி.கே. சிவக்குமார் எப்போது முதலமைச்சராவார்?" என்ற கேள்விக்கு சித்தராமையா, "தேசிய தலைமை எப்போது சொல்கிறதோ, அப்போது அவர் முதலமைச்சராவார்" என்று பதிலளித்தார். இதற்கிடையில், அதிகார மாற்றம் குறித்து தலைமை தரப்பில் எந்த நகர்வும் இல்லை என்றும், டி.கே. சிவக்குமாருக்குத் தலைமை தரப்பில் சந்திப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.