கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் சட்டமன்ற தொகுதியான வருணாவில், பணியிட மாறுதல் அச்சத்தால் பெண் அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் தர பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வரும் திவ்யா என்பவர், சுமார் 15 பாராசிட்டமால் மாத்திரைகள் உட்பட வேறு சில மாத்திரைகளையும் உட்கொண்டு, தனது அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக வருணா பஞ்சாயத்து செயலாளராகப் பணியாற்றி வரும் திவ்யாவுக்கு, மற்றொரு முதலாம் தர செயலாளர் தனது பதவிக்கு வர முயன்று, உயர் அதிகாரிகளிடம் மாற்றம் கேட்டு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக இந்த பிரச்சினை தொடங்கியதாக கூறப்படுகிறது.
நவம்பர் 20 அன்று, நிர்வாக அதிகாரி வருணா பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, திவ்யாவின் மோசமான செயல்பாடு தொடர்பாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய புகார் திடீரென மீண்டும் விசாரிக்கப்பட்டது.
பஞ்சாயத்து உறுப்பினர்களின் ஆதரவு: அப்போது அலுவலகத்தில் இருந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், திவ்யா தனது கடமைகளைச் சரியாகச் செய்து வருவதாகக் கூறி அவருக்கு ஆதரவாகப் பேசினர். பழைய புகாரை மீண்டும் தூசிதட்ட என்ன காரணம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்ற அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாகவே, அன்று மாலை திவ்யா தனது அலுவலகத்தில் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக மீட்டு மைசூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதல்வரின் தொகுதியிலேயே, பணியிட மாறுதல் குறித்த அச்சத்தால் பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.