கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் இல்லத்திற்கு இன்று காலை வருகை தந்துள்ளார். இது, கர்நாடக அரசியலில் ஒரு நல்லிணக்க முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே, முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவுக்கும் சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சுழற்சி முறை முதலமைச்சர் பதவி குறித்த மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. சித்தராமையா முழுமையாக நீடிக்க விரும்புவதாகவும், சிவக்குமார் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை கோரியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
இதை தொடர்ந்து, கடந்த வாரம் சிவக்குமார், சித்தராமையாவின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவரே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த சமரச முயற்சிகளுக்கு பிறகு, தற்போது சிவக்குமாரின் அழைப்பை ஏற்று, சித்தராமையா அவரது இல்லத்திற்கு சென்று காலை உணவு விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
சிவக்குமாரும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷும் சித்தராமையாவை வரவேற்றனர். இந்த சந்திப்பு, கர்நாடக காங்கிரஸ் அரசுக்குள் இருந்த அதிகார போராட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக பார்க்கப்படுகிறது.