உத்தர பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் நகரின் பெயர் பரசுராம்புரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜலாலாபாத்தின் பெயரை மாற்றக் கோரி உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், ஜலாலாபாத் பகுதியை, பரசுராம் துறவியின் பிறப்பிடமாக கருதப்படுவதால், அதன் பெயரை பரசுராம்புரி என மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரியிருந்தார். மேலும், அங்கு பரசுராமுக்கு கோவில் இருப்பதாகவும், இந்த பெயரை மாற்றக்கோரி ஜலாலாபாத் நகராட்சி நிர்வாகமும் கோரிக்கை விடுத்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேபணை தெரிவிக்காததால், இந்த ஊரின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷாஜஹான்பூர் தொகுதி எம்.பி. ஜிதின் பிரசாடா, பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.