உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில், சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்று குற்றம்சாட்டியபோது, ஜல் சக்தி துறை அமைச்சர், "உங்கள் மனைவியின் மீது சத்தியம் செய்யுங்கள், உங்கள் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நான் ராஜினாமா செய்கிறேன்" என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை கூட்டத்தின்போது, சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், "என் கிராமத்தில் குடிநீர் வசதியே இல்லை" என்று புகார் தெரிவித்தார். இதை கேட்ட ஜல் சக்தி துறை அமைச்சர், உடனடியாக, "உங்கள் மனைவி மீது சத்தியம் செய்யுங்கள், உங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லையென்றால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று சவால் விடுத்தார்.
ஆனால், அந்த எம்.எல்.ஏ., "நான் என் மனைவியின் மீது சத்தியம் செய்ய மாட்டேன். அப்படிச்செய்தால் வீட்டில் பிரச்சினை ஏற்படும்" என்று கூறி அமைச்சரின் சவாலை ஏற்க மறுத்துவிட்டார். இந்த பதிலால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
இந்த விவாதத்திற்கு பிறகு, உ.பி. ஜல் சக்தி அமைச்சர், "ஜல் ஜீவன் இயக்கம்" திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் 37,730 கிராமங்களுக்குத் தற்போது வழக்கமான குடிநீர் விநியோகம் கிடைத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான கிராமங்கள் பயனடைந்துள்ளன என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது