உத்தரப் பிரதேசத்தில், மாமியார் வீட்டாரால் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட ஒரு நபர், கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்சத்நகர் என்ற பகுதியில் ராஜீவ் மற்றும் சாத்னா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தனது கணவனை கொலை செய்ய சாத்னா திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது ஐந்து சகோதரர்களான பகவான் தாஸ், பிரேம்ராஜ், ஹரீஷ், லக்ஷ்மன் ஆகியோருடன் சேர்ந்து கூலிப்படையை நியமித்ததாக கூறப்படுகிறது.
ஜூலை 21 அன்று இரவு, மொத்தம் 11 பேர் ராஜீவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கியுள்ளனர். அவர்கள் ராஜீவின் கை மற்றும் இரண்டு கால்களையும் உடைத்துள்ளனர். அவரை உயிரோடு புதைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
ராஜீவைக் காட்டு பகுதிக்குக் கொண்டு சென்று புதைக்க குழி தோண்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இடத்திற்கு ஒருவர் வந்ததால் அதிர்ச்சியடைந்த குற்றவாளிகள் ராஜீவை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயம் அடைந்த ராஜீவ் வலியில் அலற முடியாமல் இருந்த நிலையில், அந்த நபர் அவரை ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராஜீவ் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜீவின் தந்தை நேத்ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மருமகளும் அவரது சகோதரர்களும் சேர்ந்து தனது மகனை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரேலியில் உள்ள நவோதயா மருத்துவமனையில் மருத்துவர் உதவியாளராக ராஜீவ் பணிபுரிந்து வருகிறார். அவர் 2009-ஆம் ஆண்டு சாத்னாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு யாஷ் (14) மற்றும் லவ் (8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கிராமத்தில் வீடு இருந்தபோதிலும், தனது மனைவி கிராமத்தில் இருக்க விரும்பாததால், நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக ராஜீவின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.