பிகாரின் நீண்டகால முதல்வரான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக அவர் சட்ட மேலவை உறுப்பினராகவே நீடித்துவருகிறார்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க, சட்டமன்றத்தில் உறுப்பினராக இருப்பது கட்டாயமில்லை; ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவையில் (சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை) உறுப்பினராக சேர்ந்தால் போதும்.
நிதீஷ் குமார் 2005-ஆம் ஆண்டு முதல் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்கிறார். அவரது தற்போதைய பதவிக்காலம் 2030 வரை உள்ளது.
நேரடி தேர்தலைத் தவிர்ப்பது குறித்து 2015-ல் அவர், "சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்; அதனால் போட்டியிட விரும்பவில்லை" என்று விளக்கமளித்தார். சட்ட மேலவை மரியாதைக்குரிய அவை என்பதால் விருப்பத்தின் பேரில் அதன் உறுப்பினராக தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது ஆரம்பகால தேர்தல் வரலாற்றில், 1985 சட்டப்பேரவை தேர்தலிலும், தொடர்ந்து ஆறு முறை மக்களவைத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது NDA கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில், நிதீஷ் குமார் மீண்டும் நான்காவது முறையாக முதல்வராகும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.