பிகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான 122 இடங்களைத் தாண்டி, 200 தொகுதிகளுக்கு மேல் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து, மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங், தங்களுடைய அடுத்த அரசியல் இலக்கு மேற்கு வங்காளம்தான் என்று அறிவித்துள்ளார். "அராஜகத்தின் அரசாங்கத்தை பிகார் மக்கள் நிராகரித்து விட்டனர். இது வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் பிகாரை வென்றுவிட்டோம். அடுத்தது மேற்குவங்கம் , தமிழ்நாடு தான் என்று அவர் கூறினார்.
பிகார் மக்கள் ஆரம்பம் முதலே 'குழப்பம், ஊழல்' நிறைந்த ஆட்சியை ஏற்க மாட்டார்கள் என்பதில் தெளிவாக இருந்தனர் என்றும், அமைதி, நீதி, வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கிரிராஜ் சிங் தெரிவித்தார். தேஜஸ்வி யாதவின் குறுகிய கால ஆட்சியில் ஏற்பட்ட குழப்பத்தை மக்கள் பார்த்தனர் என்றும் அவர் விமர்சித்தார்.
ஒட்டுமொத்தமாக, மகா கூட்டணி 36 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை இல்லை. இந்த முடிவுகள் நிதீஷ் குமார் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராவாரா என்பதை உறுதிப்படுத்தும்.