பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் பாடகியுமான மைதிலி தாக்கூர், தாம் வெற்றி பெற்றால் அத்தொகுதியின் பெயரை 'சீதைநகர்' என மாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
தற்போது 25 வயதாகும் மைதிலி தாக்கூர், 13வது சுற்று நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை விட 9,450 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இவர் வெற்றி பெற்றால், பிகார் சட்டப்பேரவையின் மிக இளம் வயது உறுப்பினர் என்ற சாதனையைப் படைப்பார்.
வெற்றி குறித்து பேசிய அவர், இது பிகார் மக்களின் வெற்றி என்றும், "அலிநகர் கண்டிப்பாக சீதை நகராக மாறும்" என்றும் மீண்டும் வலியுறுத்தினார். பெண்களுக்கான நிதிஷ் குமாரின் திட்டங்களும், பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவுமே தனது வெற்றிக்கு காரணம் என்றும் மைதிலி தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 199 தொகுதிகளில் முன்னிலை பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது.