ஆந்திர பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில், ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள், மாதூரி சாஹிதிபாய், தனது பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களகிரி டி.எஸ்.பி. முரளி கிருஷ்ணா அளித்த தகவலின்படி, வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் அளித்திருந்த நிலையில், சாஹிதிபாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சாஹிதிபாய் கடந்த மார்ச் 5ஆம் தேதி நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆன சில மாதங்களில், அவர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவதாக பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, செப்டம்பர் முதல் வாரத்தில் அவர்கள் சாஹிதிபாயை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அன்றிலிருந்து அவர் அங்கேயே தங்கியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 80 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.