மகாராஷ்டிராவின் ஜல்கான் மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் உறவினர்கள் நடத்திய தாக்குதலில், மோஹித் காடியா என்ற மருத்துவர் படுகாயமடைந்துள்ளார். இந்த தாக்குதலில் அவருக்கு செவிப்பறை கிழிந்ததுடன், மூக்கில் இரத்தம் வழியும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட கூட்டம் நிறைந்திருந்ததால், நோயாளி உறவினர்களை வெளியே காத்திருக்குமாறு மருத்துவர் காடியா கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை சுற்றி வளைத்து தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை இருவரை உடனடியாக கைது செய்துள்ளது.
மருத்துவர்கள் மீது சமீபத்தில் நடக்கும் மூன்றாவது தாக்குதல் இது என்று மகாராஷ்டிரா உறைவிட மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நிரந்தர பாதுகாப்பு வழங்க கோரி நிர்வாகத்திடம் அவர்கள் மனு அளித்துள்ளனர். சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.