மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், கச்சா குண்டுகள் தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரானினகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செடியானி பகுதியில் இன்று காலை, உஸ்மான் பிஸ்வாஸ் என்ற நபர், கச்சா குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடி விபத்தில் உஸ்மான் பிஸ்வாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ரானினகர் காவல்துறையினர், வெடிவிபத்து நடந்த இடத்தில் இருந்து மேலும் பல கச்சா குண்டுகளை கைப்பற்றினர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இது இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமாகும். நேற்று இதே முர்ஷிதாபாத் மாவட்டத்தின் டொம்கல் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகள் அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.