முதல்முறையாகக் கடன் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் விளக்கமளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இந்த முக்கிய தகவலை தெரிவித்தார். முதல்முறையாகக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ அல்லது பூஜ்யமாக இருந்தாலோ, அவர்களது விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் வகுத்திருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
ஏற்கெனவே கடன் வாங்கி இருப்பவர்கள் மீண்டும் கடன் கோரும்போது, அவர்களது கடன் வரலாற்றை கண்டறிய சிபில் ஸ்கோர் அவசியமாகிறது. ஆனால், இதுவரை எந்த கடனையும் பெறாதவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, புதிதாக கடன் விண்ணப்பிக்கும்போது சிபில் ஸ்கோரை மட்டும் காரணமாக கூறி அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படக் கூடாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, புதிதாக தொழில் தொடங்கவும், கல்வி பயிலவும் அல்லது வீடு வாங்கவும் கடன் தேடும் லட்சக்கணக்கான மக்களுக்கு பெரிதும் உதவும். வங்கிகள் சிபில் ஸ்கோரை ஒரு முக்கிய காரணியாக பயன்படுத்தினாலும், முதல்முறையாக கடன் பெறுபவர்களுக்கு அதை முழுமையாக புறக்கணித்து விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என்ற தெளிவான வழிகாட்டுதல், நிதி அணுகலை மேலும் எளிதாக்கியுள்ளது.