ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபகாலமாக, அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே இடையூறு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.
நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், யாரும் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட இடையூறு என அஇஅதிமுகவினர் குற்றம் சாட்டினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, நிலைமையை சமாளித்து ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ஆம்புலன்ஸுக்கு ஏற்படும் சேதத்திற்கும் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது