பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் கடன் பெற்றுத் திரும்ப செலுத்தாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏற்கனவே சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இரண்டு வங்கிகள் கொடுத்திருக்கும் புகார்களின் அடிப்படையிலும், செபி உள்ளிட்ட அமைப்புகளின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் தற்போது அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து வாங்கிய ரூ.31,500 கோடி கடன் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தீர்வு செயல்முறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின்படி, திவால் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.