பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையவிருக்கும் நிலையில், சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சமீபத்திய தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 89 இடங்களையும், JDU 85 இடங்களையும் கைப்பற்றின. JDU தலைவர் நிதீஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராக நவம்பர் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் பதவி JDU-வுக்கு வழங்கப்பட்டதால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பேரவை தலைவர் பதவியையும் முக்கிய துறைகளையும் பெற பாஜக முனைப்பு காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை துறைகள் மற்றும் சபாநாயகர் பதவி குறித்து விவாதிக்க, நிதீஷ் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் அடங்கிய உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவில், முக்கிய பதவிகள் ஒதுக்கீடு குறித்து தெளிவு பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.