பிகார் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்கெடுப்பை தொடர்ந்து, லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. சம்பவி சௌத்ரியின் இரு கைகளிலும் மை வைக்கப்பட்ட காணொளி, இரட்டை வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பி சமூக ஊடகங்களில் வைரலானது.
பாட்னாவின் புத்தா காலனியில் வாக்களித்த பின்னர், சம்பவி தனது வலது மற்றும் இடது கை விரல்களில் மை வைக்கப்பட்டிருப்பதை காட்டினார். இது ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
இதுகுறித்து பாட்னா மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்தது. மை வைக்கும் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கை விரலில் மை வைத்ததாகவும், தலைமை அதிகாரி தலையிட்ட பிறகு, சரியான நடைமுறையின்படி இடது கை விரலிலும் மை வைக்கப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவி சௌத்ரி வாக்காளர் பட்டியலில் ஒருமுறை மட்டுமே தனது வாக்கை செலுத்தியுள்ளார் என்பதையும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விளக்கத்திற்கு பிறகும், அரசியல் கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.