தஞ்சாவூர் மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல் காரணமாக வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆறு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயி சரவணன் என்பவரது வீட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில், எட்டுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளை கடித்துக் குதறியுள்ளன. நாய்களை துரத்திவிட்ட பின்னர், 50 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள 6 ஆடுகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராமப்புறங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், ஆடு, கோழிகளை தாக்குவதுடன், குழந்தைகளையும் துரத்துவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இறந்த ஆடுகளின் உரிமையாளருக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தெருநாய்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய் தாக்குதல் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், சமீபத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே இடங்களில் விட கூடாது என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.