பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட தற்போது முன்னிலை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 192 தொகுதிகளில் வலுவான முன்னிலையில் உள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 85 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
பிகாரில் 238 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி, மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் 2 முதல் 5 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என குறிப்பிட்டிருந்தன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த ஜன் சுராஜ் கட்சி, தற்போது நிலவரப்படி அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து, அதன் முன்னிலை எண்ணிக்கை 'பூஜ்ஜியமாக' உள்ளது.