பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், தற்போதைய முன்னிலை நிலவரங்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இந்தச் சூழலில், முதலமைச்சர் நிதீஷ் குமாரின் இல்ல வாசலில் அவரது ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
"புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது" என்று குறிப்பிடும் போஸ்டர்கள், நிதீஷ் குமாரின் இல்ல வாசலில் ஒட்டப்பட்டுள்ளன. இது அவரது வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், தேர்தலில் ஜனதா தளத்துக்கு வாக்களித்த அனைத்துச் சமூக மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்களும் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.
பாட்னாவின் மற்ற பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், நிதீஷ் குமார் அனைத்து சமூகத்தினரின், குறிப்பாகப் பின்தங்கியவர்களின் "பாதுகாவலர்" என்று புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், நிதீஷ் குமார் நான்காவது முறையாக முதலமைச்சராவார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.