டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயம், நெஞ்சுக்கூடு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் ஏ.கே. பிசோய், பெண் செவிலியர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பணியிட அச்சுறுத்தல் புகாரை தொடர்ந்து, உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
செவிலியர் சங்கம் கொடுத்த தொடர் புகார்கள், பிரதமர் அலுவலகம் வரை சென்றதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் பிசோய், செவிலியர்களை நோக்கி "ஆபாசமான மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தினார்" என்றும், புகார் கொடுத்தவர்களை பழிவாங்க மிரட்டியதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் பிறப்பித்த உத்தரவின்படி, சி.டி.வி.எஸ். துறைத் தலைவர் பொறுப்புப் பேராசிரியர் டாக்டர் வி. தேவகவுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நிறுவனத்தின் உள் புகார்கள் குழுவிடம் விசாரணைக்காக அனுப்பப்பட உள்ளது.
விசாரணை முடியும் வரை டாக்டர் பிசோய் நிறுவனத்தில் நீடிப்பார். இதற்கு முன்பும் 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முறைகேடு மற்றும் மருத்துவ அலட்சியம் தொடர்பாக இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவிலியர்கள் சங்கம் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.