குஜராத்தின் சூரத்தை சேர்ந்த 18 வயது சமூக வலைத்தள பயனாளி பிரின்ஸ் படேல் தனது KTM Duke மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தின் சிசிடிவி காட்சிகளின்படி, பிரின்ஸ் பல அடுக்கு மேம்பாலமான 'கிரேட் லைனர் பாலத்தில்' இருந்து சுமார் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தார்.
கீழே விழுந்த வேகத்தில், விபத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அவரது தலை துண்டிக்கப்பட்டு உடலிலிருந்து தனியாக பிரிந்தது. விபத்தின்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரின்ஸ் படேல், தனது பைக் சாகச ரீல்களுக்காக டீனேஜர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு 'லைலா' என்று பெயரிட்டு, அது குறித்த வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கூட, தான் சொர்க்கத்தில் இருந்தாலும் 'லைலா' மீது தான் அதிக பாசம் இருக்கும் என்று உருக்கமாக ஒரு வீடியோவை அவர் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.