குஜராத் மாநிலம் சூரத் நகரில், மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், ஒரு நட்சத்திர விடுதியில் தொழிலதிபர் சமீர் ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மது விருந்து நடப்பதாக புகார் எழுந்தது.
தகவலின்பேரில் சோதனைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளுடன், சமீரின் 19 வயது மகன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொலி வைரலாகி வருகிறது.
காணொலியில், அந்த இளைஞன் காரில் இருந்து இறங்கி, ஒரு காவல் அதிகாரியின் மொபைல்போனை பறிக்க முயல்வது பதிவாகியுள்ளது. இந்த விருந்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
சோதனையின் முடிவில், ரூ.3.16 லட்சம் மதிப்புள்ள பீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் கார் உட்படப் பல பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது.
19 வயது இளைஞனுக்கு பரிசோதனை செய்ததில் அவன் மது அருந்தவில்லை என்று தெரியவந்தது. இருப்பினும், மதுபானம் கொண்டு வரப்பட்ட காரை ஓட்டி வந்ததாலும், காவல் அதிகாரிகளுடன் மோதியதாலும், இளைஞனும் அவனது தந்தை சமீரும் கைது செய்யப்பட்டனர். குஜராத் காவல்துறை இது குறித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.