அமெரிக்கா, இந்தியாவுக்கு விதித்த கூடுதல் 25% வரி நாளை முதல் அமலுக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செய்தி இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 81,050 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 170 புள்ளிகள் சரிந்து, 24,795 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவின் இந்த திடீர் வரி விதிப்பு, இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதியை பாதிக்கும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது, முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை வேகமாக விற்பனை செய்ய வழிவகுத்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் திடீரென ஏற்பட்ட இந்த சரிவு, சந்தையின் நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களில், இந்துஸ்தான் லீவர், நெஸ்லே இந்தியா, எட்டர்னல், ஐச்சர் மோட்டார்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சிறிய அளவில் உயர்ந்துள்ளன. மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவில் உள்ளன.