ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர், இந்தியாவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் தேவை இல்லை என்றாலும், தற்போது அதிக அளவில் இறக்குமதி செய்வதாக கூறியுள்ளார். அடுத்த ஆறு நாட்களில் இரண்டாம் கட்ட வரிவிதிப்பு வரப்போகும் நிலையில், இந்தியா அதை விரும்பாது என்று நம்புவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தியா தனது பொருட்களை விற்று பெறும் பணத்தைத்தான் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க பயன்படுத்துகிறது. அந்த எண்ணெயை சுத்திகரித்து லாபம் பார்க்கிறது. இந்தியாவுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ரஷ்யா ஆயுதங்கள் வாங்கவும், உக்ரைன் போருக்கு பயன்படுத்தவும் செய்கிறது.
இந்தியா எனக்கு மிகவும் பிடித்த நாடுதான். உலகிலேயே மிக சிறந்த பிரதமர் மோடி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதே நேரத்தில் உலக பொருளாதாரத்தில் உங்களின் பங்கு என்ன என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நினைத்தால் நிறுத்த முடியும். எனவே, இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உதவ வேண்டும்" என்று கூறினார்.