சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் அமைந்துள்ள காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
மூலவரான காசி விஸ்வநாதருக்கு 300 கிலோ அரிசியில் சாதம் சமைக்கப்பட்டு, காய்கறிகளுடன் சேர்த்து சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களே தாமாக முன்வந்து 320 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை அன்பளிப்பாக வழங்கினர்.
கோயிலின் மண்டபத்தில் சாதத்தால் சிவனும், காய்கறிகளால் சாகம்பரி அம்பாள் உருவமும் வடிவமைக்கப்பட்டது. அன்னாபிஷேக தினத்தில் சாகம்பரி அன்னையை வழிபட்டால், ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.
அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சாதம், பக்தர்களால் வழங்கப்பட்ட சாதத்துடன் கலக்கப்பட்டு, சாம்பார், ரசம், பொரியலுடன் பிரசாதமாக வழங்கப்பட்டது.