நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க திருத்தலம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில். இத்தலத்தில் சூரனை வதம் செய்ய சிக்கலில் வேல் பெற்ற முருகன் அருள்பாலிக்கிறார். இங்கு வால்மீகி முனிவரும் இந்திரனும் யாகம் செய்து முருகனின் காட்சியைக் கண்டனர்.
யாக காட்சியைக் கண்ட சிற்பி ஒருவர், அதே கோலத்தில் மயில் மீது நின்ற முருகன், வள்ளி தெய்வானை சிற்பத்தை ஒரே கல்லில் வடித்தார்.
சிற்பத்தின் அழகை கண்டு பொறாமை கொண்ட மன்னன், அவர் மேலும் சிற்பம் செய்யக்கூடாது என்று எண்ணி முதலில் கட்டை விரல்களையும் பிறகு கண்களையும் குத்தும்படி ஆணையிட்டான்.
பார்வையை பறிகொடுத்த நிலையிலும், மனதில் நிறைந்த முருகனின் திருவுருவத்தை எண்ணி வருடி வருடி, அதே அழகுடன் இன்னொரு சிற்பத்தை உருவாக்கினார்.
இதைக் கண்ட மன்னன் வியந்து பாராட்ட, தனது திருமேனியைக்காண முடியவில்லையே என்று வருந்திய சிற்பிக்கு முருகன் பார்வையளித்து, 'என் கண்ணையே உனக்கு தருகிறேன்' என்று அருளினார்.
இந்த சிற்பச் சிறப்பால், இத்தல முருகனை எந்த கோலத்தில் நினைத்து தரிசித்தாலும், அதே கோலத்தில் அவர் காட்சி தருவார் என்பது ஐதீகம். மீனவ மக்கள் இவரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றனர். அபிஷேக தேன் பிரசாதம் மகப்பேறு அருளும் என்பது இங்குள்ள சிறப்பு நம்பிக்கை.