உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசி சாதம் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி மிகவும் பிரம்மாண்டமான அன்னாபிஷேகம் இன்று நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அதன்பின்பு, பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 1000 கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் கொண்டு லிங்கத் திருமேனி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த அன்னாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.