அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இன்று ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு வருகை தருகிறார். தனி விமானம் மூலம் ஆக்ராவின் கேரியா விமான நிலையத்திற்கு வரும் டிரம்ப் ஜூனியர், அங்கிருந்து தாஜ் மஹாலுக்கு செல்கிறார்.
டிரம்ப் ஜூனியருடன், சுமார் 40 நாடுகளில் இருந்து 126 சிறப்பு விருந்தினர்கள் தாஜ் மஹால் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்கின்றனர். அவருடைய வருகையையொட்டி, ஆக்ரா நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்ரா பயணத்தை தொடர்ந்து, டிரம்ப் ஜூனியர் இந்த வார இறுதியில் உதய்பூருக்கு செல்கிறார். அங்கு, ஒரு இந்திய-அமெரிக்கத் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த திருமண விழாவில் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு டிரம்ப் ஜூனியர் இந்தியா வந்திருந்தபோது, புது டெல்லி, மும்பை, புனே மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்றார்.