அமெரிக்காவில், சான் டியாகோவிலுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அலுவலகங்களில், கிரீன் கார்டுக்கான நேர்காணலின்போது, அமெரிக்க குடிமக்களின் துணைவர்கள் உட்பட விசா காலாவதியானவர்கள் கைது செய்யப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியர்கள் உட்பட பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குடியேற்ற வழக்கறிஞர் சாமன் நசேரி, தனது வாடிக்கையாளர் ஒருவர் நேர்காணலுக்கு சென்றபோது கைவிலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக கூறினார். விசா காலாவதியானவர்களை USCIS அலுவலகத்திலேயே ICE கைது செய்யும் நடைமுறையை அமல்படுத்த தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் மட்டும் தனது ஐந்து வாடிக்கையாளர்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள் என்றபோதும், இதேபோல கைது செய்யப்பட்டதாக நசேரி உறுதிப்படுத்தினார். சட்டப்படி அமெரிக்காவில் நுழைந்து, விசா காலாவதியான பின்னரும் அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்தவர்கள், கிரீன் கார்டுக்கான சாதாரண நடைமுறையில் செல்லும்போது கைது செய்யப்படுகின்றனர் என்று அவர் விளக்கினார்.
சான் டியாகோ USCIS அலுவலகத்தில் மட்டுமே இந்தக் கைதுகள் நடப்பதாக மற்றொரு வழக்கறிஞர் ஹபிப் ஹஸ்பினி குறிப்பிட்டார்.