பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டுவிட்டார், கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருவதால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை, காவல்துறை தாக்கும் காணொலி வைரலாகி வருகிறது. தங்கள் சகோதரனின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து போராடியபோது, பஞ்சாப் காவல்துறையினர் தங்களை தாக்கியதாகச் சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 71 வயதான ஒரு சகோதரி, தலைமுடியை பிடித்து இழுத்து சென்று தரையில் தள்ளியதால் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இம்ரான் கானை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாததால், அவரது உடல்நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. கைபர் - பக்துங்க்வா மாகாண முதல்வர் உட்பட பலருக்கு சந்திப்பு மறுக்கப்பட்ட நிலையில், இம்ரான் சிறைக்குள் கொல்லப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.